ஒகயோவின் தலைநகர் கொலம்பசிலிருந்து இரண்டு பேருந்துகள் புறப்பட்டன. சின்சினாட்டி, டேடன் நகரங்களிலிருந்தும் உணர்வாளர்கள் பங்கு கொண்டனர். மூதாட்டி, இளஞ்சிறார், மாணவர்கள், இளைஞர்கள், தமிழகத் தமிழர்கள் எனப் பேரணியில் பங்கேற்கக் கொலம்பசிலிருந்துப் புறப்பட்ட தமிழர் குழு, நாளைய பேரணியின் பங்கேற்கும் மக்கட் பிரிவுகளை முன்னுணர்த்துவதாக இருந்தது.
இல்லத்தரசி மாரியை அழைத்து வரவில்லையா என அன்புடன் வினவினார் அவர் தோழி ஆனந்தி. இயலாநிலையை எடுத்துரைத்தேன்.
இரண்டாவது பேருந்து வரச் சற்றே தாமதமானதால், முதல் பேருந்தில் மூத்தோரும், சிறுவருமுள்ள குழுவினர் முதலில் புறப்பட்டனர்.
சற்றே தாமதமாக வந்த அடுத்த பேருந்து வரும் வரை, வாசிங்டன் வர இயலாவிட்டாலும் பேருந்து வாசல் வரை வந்து எம்மை வழி அனுப்பிய கொலம்பசு வாழ் பாலா ஐயருடன் ஈழ உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டோம். சின்சினாட்டி ஈழ அன்பர் பாலாவின் உணர்ச்சியை ஓரந்தள்ளி இயல்பான உள்ள நிலையை விளக்கும் நிலை மன நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கொலம்பசு பாலா, தமிழகத்தில் ஈழத்திற்காக உயிரை மாய்க்கும் நண்பர்களின் தியாகத்தையும், கலைஞரின் நிலையையும் விவாதித்தார். இணையத்தில் பெரும்பாலோர் விவாதிக்கும் நிலையை ஒத்தே அவர் நிலையும் இருந்தது.
உரிமையுள்ள ஒரு தந்தை தன் மகனுக்காகப் போராடாமல், தன் இளையவரை ஆதரித்தால், மகன் தந்தையிடன் காட்டும் வெறுப்பு அங்கே வெள்ளிடை மலை. யாரைக் குறை கூற, இளையவரை நம்பும் தந்தையையா? அல்லது தந்தையின் இயலாமையை பயன்படுத்திக் கொள்ளும் இளையவரையா? எதுவாயினும் தன்னைக் காக்க மறுக்கும் தந்தையை எதிர்க்கும் தனயனின் உணர்ச்சி வேகம் அங்கே கண்கூடு.
இப்பயணத்தின் மற்றுமொரு சிறப்பம்சம், நண்பர்கள் கொலம்பசில் புறப்பட்டது முதல் ஈழச்சிந்தனையே. பேருந்தில் சின்சினாட்டி அன்பர் பாலா மற்றும் நண்பர்கள் சட்ட மறுப்பு, ஒத்துழையாமை பற்றியும் விவாதித்தனர். ஈழப் போரை இந்திய விடுதலைப் போருடன் ஒப்பிட்டு இக்கால நிலை குறித்தும் விவாதித்தனர்.
சற்றே தாமதமாக வந்த அடுத்த பேருந்து 11 மணி அளவில் புறப்பட்டுக் காலை 6 மணி அளவில் மேரிலாந்து ஃபிரடெரிக்கில் காலைக்கடன் கழிக்க இரண்டு மணி நேரம் நின்றது. காலைக்கடன் கழிக்கப் புறப்பட்ட எட்டுப்பேர் கொண்ட குழுவில் சரவணனுடன், ஒகயோமாநிலப்பல்கலைகழகக் மாணவர் சேந்தன், கஜானனும் உள்ளடக்கம்.
உரையாடல்களில் சேந்தன் மற்றும் நண்பர்கள் உணர்ச்சி வயப்பட்டனர். தோழர் கஜானன், பல வரலாற்றுக் குறிப்புக்களை நண்பர்களுக்கு அளித்தார். சேர, சோழ, பாண்டிய, கண்டி உறவுகள்; நாகர், ஒரிய வம்சாவளியினர் உறவுமுறையென இளைஞர்கள் அறியாத பல நிகழ்வுகளை விளக்கினார்.
காலை பேருந்திலிருந்து இறங்கும் பொழுதே குளிர்க்காற்று வீசி, இன்றைய குளிர்நிலைக்கு முகன்மன் கூறியது. திறந்த வெளியில், காற்றுடன் குளிர் என்பதால், அக்குளிர் உடலைத் தாக்காத வண்ணம் உடை அணிந்து கொண்டு, முகம் தவிர, எல்லாப் பகுதியையும் முழுமையாக குளிருடைகளால் மூடிக் கொண்டு மீண்டும் இலக்கை (இலங்கை நோக்கிப் புறப்பட்டிருந்தால் இந் நேரம் தமிழீழக் கொடி அங்கே பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்குமோ? ) நோக்கிப் புறப்பட்டோம். மெக்டொனால்ட்ஃசி(ஸி)ல் காலைச் சிற்றுண்டி முடித்து 9 மணி அளவில் கொலம்பசுப் பேரணிக் குழுவினர் வாசிங்டன் நோக்கிப் புறப்பட்டோம்.
இந்நாள் ’தமிழ் நடை’ பிறந்த நாள். தந்தை பெருங்கவிக்கோ 1993ம் ஆண்டு, தமிழ்/ தமிழர் உணர்வு மங்கிய நிலையில், தமிழ்/தமிழன் என்று பேசினாலே தீவிரவாதம் / பிரிவினைவாதத்துடன் இணைத்துத் தண்டிக்கப் படுவோமோ என்று மீண்டும் அஞ்சிய காலத்தில்(எத்தனை காலம் மீண்டும் மீண்டும் அஞ்சிக் கொண்டேயிருப்பது?) தமிழ் / தமிழுணர்வு முதண்மை பெறவேண்டும் என்று வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து திருத்தணி வரை பல நூறுக்கும் மேலான அன்பர்களுடன் தமிழ்நடைப் பயணம் மேற்கொண்டார். அவர் தமிழ்நடைப் பயணம் மேற்கொண்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக் கூறினேன்.
அலுவலகத்தில் முக்கிய வேலை, விடுமுறை இல்லை, குழந்தையைப் பள்ளியில் விட வேண்டும், முக்கியக் கூட்டம், உடல்நலக் குறைவு எனக்கு இன்று, என்று பல காரணம் கூறி வர இயலாத நண்பர்கள் கூட்டத்தில் ஒருவனாக இல்லாமல், மனமிருந்தால் மார்க்கமுண்டு என்னும் நண்பர்கள் குழவில் ஒருவனாக என்னை இருக்க அனுமதித்த என் மக்களுக்கு நன்றி கூறினேன்.
காலை பத்து மணி அளவில் வெள்ளை மாளிகையின் பின்னுள்ள நீள்வட்டப்(ellipse) பூங்காவை வந்தடைந்தோம். பேரணித் திடலையடைந்த முதல் பேருந்தாக எங்கள் பேருந்து அமைந்தது. முதல் பேருந்தாக அமைந்ததால், சரியான இடம் தானா என உறுதிப்படுத்த சுசீலாவும், ரஞ்சனும் தொலைபேசியில் முயன்று கொண்டிருந்தனர். மேரிலாந்து வாழ் சகதோழர் (சகோதரர்-தோழர்) வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க இயக்குநர் வெற்றிப் பாண்டியனைத் தொடர்பு கொண்டேன். திடலில் மக்கள்கூட்ட ஒழுங்குநர் பொறுப்பிலிருந்த அவர் சரியான இடம் என்று உறுதிப்படுத்தினார். செனட்டர், கீழவை (Congressman) உறுப்பினரைச் சந்திக்க வேண்டியவர்கள் தவிர மற்ற ஒகயோக் குழுவினர் அனைவரும் ஆர்ப்பாட்டத் திடலான நீள்வட்டப் பூங்காவை அடைந்தோம். ஆர்ப்பாட்டம் தொடங்க மேலும் ஒரு மணி நேரம் இருந்ததால், தொடங்கும் வரை நம்மாலான பணிகளைச் செய்வோம் என்றெண்ணி சகதோழர் பாண்டியனுடன் இணைந்து ஒழுங்குநருக்கான பணிகளில் ஈடுபடத் தொடங்கினேன்.
ஒழுங்குநர்களுக்கான பணிகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த திரு. ராசன் ஒழுங்குநருக்கான சீருடைகளை எனக்கும், பாண்டியருக்கும் அளித்து, பேருந்து வந்தடையும் இடத்தில் நின்று, அவர்களுக்கு ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு வழி காட்டப் பணித்தார். வெள்ளை மாளிகை அமைந்துள்ள ஃபிலெடெல்ஃபியா சாலை வழியாக நீள்வட்டச்சாலையை அடையும் பேருந்துகளில் வரும் அன்பர்களுக்கு அங்கிருந்து திடலுக்கு வழி காட்டும் பொறுப்பை மேற்கொண்டோம். சாலைகளில் இருந்து பணியாற்றியதால், நடுவணரசு அளித்த அனுமதிச் சான்றிதழின் ஒரு பிரதியை எஙகளிடம் அளித்தனர். முழுமையாகப் படிக்க நேரமின்மையால், அனுமதியைக் கையில் வைத்துக் கொண்டு எமது பணிகளில் இறங்கினோம்.
ஈழ ஆதரவாளர்களுக்காக நீள்வட்டப் பூங்காவின் முன்பகுதியிலும், இலங்கை ஆதரவாளர்களுக்காக நீள்வட்டப் பூங்காவின் பின்பகுதியிலும் அனுமதி அளித்திருந்தனர். சிங்களவர் தமிழர் போல் ஊடுருவி குழப்பம் விளைவிக்கலாம் என்பதால், ஒழுங்குநர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய அவசியமும் விளக்கப்பட்டது. நாங்கள் வழி காட்டும் ஒவ்வொருவரிடமும், நிலைமையை விளக்கிச் சொல்லி, சரியான இடத்திற்குச் செல்ல வழி காட்டினோம். ஃப்ளோரிடா, சார்சியா, வடக்கு கரோலினா, நியூயார்க், நியூசெர்சி எனச் சிற்றுந்திலும் பேருந்திலும் ஆர்வலர் கூட்டம் அலைமோதத் தொடங்கியது.
11 மணிஅளவில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. சாலையிலிருந்து தேசிய கிருஃச்துமசு(Christmas) மரமருகில் சென்று பணியைத் தொடர்ந்தோம். மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. வரும் மக்கள் கூட்டத்தை முகன்மன் கூறி வரவேற்றும் “உள்ளுக்குப் போங்கோ”,“உள்ளுக்குப் போங்கோ” என்று திடலின் பகுதியில் பரவ வேண்டியும் அனுப்பிய வண்ணமிருந்தோம். பணிக்கிடையில் நண்பர்கள் கொழந்தைவேல் இராமசாமி, நியூ செர்சி தமிழ்பள்ளித் தலைவர் தயாபரன் ஆகியோரைக் கண்டு பேசி மகிழ்ந்தேன்.
”இனப் படுகொலையை நிறுத்த உதவுங்கள்”
“குடியரசுத் தலைவர் ஒபாமா , தமிழர்களைக் காப்பாற்றுங்கள்”
“நாங்கள் விடுதலைப் போராளிகள்”
“மனித உரிமை மீறலைத் தடுத்து நிறுத்துங்கள்”
போன்ற மனதைத் தொடும் முழக்கங்களுடன் தமிழர் தன் உணர்ச்சியின் எல்லை வரை சென்று அமைதி முழக்கமிட்டனர். உணர்ச்சி மிக்க பதாகைகளை ஏந்தி சிறுவர் முதல் முதியோர் வரை கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் உணர்ச்சி முழக்கமிட்டனர்.
இடையிடையே உணர்ச்சிப் பெருக்கால் நமக்கு அனுமதி அளிக்கப்பட்ட பகுதியை மீறி வந்து முழக்கமிட முனைந்த போது சரவணன், கஜானன் , பாண்டியன் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அவர்களை மீண்டும் மீண்டும் அனுமதி எல்லைக்குள் அனுப்பினோம். நண்பர்கள் உணர்ச்சி மிகுதியால் வெளியேறுவதும், நாங்கள் அவர்கள் எல்லைக்குள்ளேயே இருக்கவும் மதிக்கவும் வேண்டுவதும் தொடர்ந்தது. எல்லைகளை மதிக்கத் தெரியாத சிங்கள அரசுக்கு நம்மால் எல்லைகளை மதிக்க முடியும் என நிருபிப்போம் என்ற எமது வேண்டுகோளுக்கு இணங்கி நண்பர்கள் எல்லைக்குள்ளிருந்து போராடியது நிறைவை அளித்தது.
கனடாவில் இருந்து பேருந்துகள் வர வர, ஒவ்வொரு குழுவினரும் உணர்ச்சிப் பதாகைகளை ஏந்தியும்,முழக்கங்களை இட்டதும், போராட்டம் மீண்டும் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றது. ஏறத்தாழ40 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடும் போராளிகளின் அடுத்த தலைமுறை உணர்வுகளைக் காண்பது, அயலகம் வாழ் இரண்டாம் தலைமுறையின் ஆதரவும் போராளிகளுக்கே என்பதைப் பறைசாற்றியது என்றால் அது மிகையாகாது.
எவருடைய உந்துதல் என்று தெரியவில்லை தீடிரென ஒரு குழு சாலைப் பேரணியைத் தொடங்கிற்று. அனுமதியின் படி 300 பேர் மட்டுமே பேரணியாக செல்ல முடியும். மற்றவர் திடலில் ஆர்ப்பாட்டத்தில் மட்டுமே ஈடுபடமுடியும். ஆகையால் சிறந்த பதாகைகள் கொண்டவர்கள் பேரணியில் செல்ல வேண்டும் என்று ஒரு தரப்பினர் வாதிட ஆரம்பித்தனர். குழப்ப நிலை நீடிப்பதை ஒரு நண்பர் வந்து முறையிட்டு, ஒழுங்குபடுத்த வேண்டினார். உடன் அந்த நண்பருடன் காவல் அதிகாரி இருந்த இடம் சென்றோம். 200 பேர் சென்றுவிட்டனர், இன்னும் 100 பேருக்கு மட்டுமே அனுமதி என்றார் அதிகாரி. நீங்கள் சொல்லும் 100 பேரை மேலும் அனுப்பத் தயார் என்றார். காவலருடன் இணைந்து சாலை மறிப்பைப் போட்டு, சிறந்த பதாகைகள் கொண்ட 100 பேரை அழைத்துப் பேரணியில் செல்ல ஏற்பாடு செய்தோம். காவலருடன் இணைந்து நாம் அவருடன் ஒத்துழைத்ததில் மகிழ்ந்த காவலர்கள் கட்டை விரலை உயர்த்திக் காட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். பேரணியில் செல்ல இயலாமல் வருத்தத்தில் இருந்த குழுவினருக்கு நிலையை விளக்கி ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டினோம். மீண்டும் போரட்டத் திடலுக்கு அழைத்துச் சென்றோம்.
இந்தக் குழப்பத்தில் ஒழுங்குநர் பணியில் ஈடுபட்டிருந்த கொலம்பசு தமிழ் சங்கத் தலைவர் சரவணன் பெற்றோரைப் பிரிந்து தனியாக இருந்த ஓர் சிறுவனைக் கண்டார். பெற்றொர் பெயர் கூற இயலா சிறு வயது. ஒலிபெருக்கியில் அறிவித்தார். தன் இளங்கன்று தன்னிடமிருந்து பிரிந்ததுகூட அறியாமல் உணர்ச்சி முழக்கமிட்டுக் கொண்டிருந்த அன்பர் வந்து கூட்டிச் சென்றார். ஈழத் தாக்குதல்களால் தாக்கப் பட்டு, பெற்றோரிடமிருந்து நிரந்தரமாகப் பிரிந்து அல்லல்படும் ஈழச்சிறார் எவ்வளவு வேதனையடைவார், அவர் அல்லல் துடைப்பவர் யார்? விதியே விடை எங்கே? கதிர்காமக் கந்தரும் அறியாரோ இவர் வேதனையை.
ஓய்வறைக்குச் செல்லும் அன்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டி அனுப்பினோம். பதாகைகளை திடலிலேயே விட்டுச் செல்லவும் வேண்டினோம். சிங்கள ஆதரவாளர்களும் அருகிலேயே இருப்பதால், நாம் அமைதி காக்க வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொருவரிமுடம் வலியுறுத்தி அனுப்பினோம்.
போராட்ட எழுச்சி தொடர்ந்த வண்ணமிருக்க, ஏறத்தாழ இரண்டு மணியளவில் பேரவைத் தலைவர் முத்துவேல் செல்லையாவைத் திடலில் சந்தித்தேன். பேரணிக்கான அனுமதியும் இருப்பதைக் கூறி சிறந்த பதாகைகள் கொண்டு 300 நபர் கொண்ட பேரணிக் குழுவைத் தேர்ந்தெடுத்து பேரணி செல்ல அனுமதிக்குமாறு காவல் அதிகாரியிடம் வேண்டினார். காவல் அதிகாரிகள், மேலதிகாரியிடம் தொடர்பு கொண்டனர். முன்னர் 100 சிறந்த பதாகைகளை அனுப்ப உதவிய மேலதிகாரி பேரவைத் தலைவர் முத்துவேல் செல்லையாவிடம், ஏற்கனவே பேரணிக்கு மக்கள் அனுப்பப் பட்டுவிட்டதை விளக்கினார். மாற்றாக நீள்வட்டப் பூங்காவில் நமக்கு அனுமதிக்கப் பட்ட பகுதியில் பேரணியாகச் சுற்றிவரத் தடையில்லை என்றார். தலைவருடன் இணைந்து முன் நடத்த சிறந்த பதாகைகள் கொண்ட இந்த 300 நபர் பேரணிக் குழு முழக்கங்களுடன் நீள்வட்டப் பூங்காவை வலம் வர ஆரம்பித்தது.
குதிரைப் படையினர், சிங்கள ஆதரவு படை அருகில் தயாராக இருப்பதைக் கவனித்த தலைவரும், நண்பர்களும் சிங்கள ஆதரவு போராட்டவாதிகளுக்கு மிகவும் நெருங்காமலும், அதே நேரம் பதாகைகளும், முழக்கங்களும் அவர்களை எட்டும் வண்ணமும் பேரணிக் குழுவை வழி நடத்தியது. வெற்றிகரமான முதல் சுற்றில் உற்சாகமடைந்த நண்பர்கள் இரண்டாம் சுற்று செல்லவும் தொடங்கினர். நண்பர்களின் ஆர்வத்தால் கட்டுண்ட தலைவருடன் இணைந்து இரண்டாம் சுற்றுக்கும் பேரணிக் குழு புறப்பட்டது.
இரண்டாம் சுற்றில் சிங்கள ஆதரவு போரட்டக் குழுவினருக்கு மிக அருகில் வந்ததும் பேரணி வந்த நண்பர்கள் அவ்விடம் நின்று சிங்கள ஆதரவு போரட்டக் குழுவினருக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினார். நிலைமை கட்டுங்கடங்காமல் போவதைத் தவிர்க்க சரவணன், கஜானன், சின்சினாட்டி நண்பர் அனைவரும் இணைந்து பேரணிக் குழுவினர் சிங்கள ஆதரவாளர்களை நோக்கி முன்னேறாமல் தடுத்தோம்.
பின்னால் பாயத் தயாராக இருந்த குதிரைக் காவலர்கள், முன்னே உணர்ச்சிப் பிழம்பாய் பாயத் துடிக்கும் ஆதரவாளர்கள், இந்தச் சில நிமிடங்கள் அமைதிக்கும் வன்முறைக்கும் ஒரு மெல்லிய இழையாக..... இறைமை என்றாலும் சரி , இயற்கை என்றாலும் சரி, “அப்பா இன்றைய நாள் எனக்கு என்றும் இனிய நாளாக இருக்க வேண்டும் என்ற நினைவோடே செயல்படுங்கள்” என்ற என் மக்களின் எச்சரிக்கை வார்த்தைகள் காரணம் இல்லாமல் கூறப் படவில்லயோ என்ற நினைவு என் நினைவில் ஒரு கனம் தோன்றி மறைந்தது.
இளஞ்சிறார், தள்ளுவண்டியில் முதியோர் என்று நமது போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர் நினைவும் நம்மை அழுத்த, “அன்பு கூர்ந்து பின்னால் செல்லுங்கள்”, “தயவு கூர்ந்து பின்னால் செல்லுங்கள்” என்று பேரணிக் குழுவினரைப் பின் தள்ளினோம். இந்தப் பேரணிக் குழுவினரில் உணர்ச்சியைக் கட்டுக்குள் வைத்திருந்த இளைஞர் பட்டாளமும் எம்முடன் இணைந்து கை கோர்த்துப் பெரும் பாதுகாப்பு அரணை உருவாக்கியது. எம்மை மீறிச் செல்ல முயன்ற பேரணிக் குழுவினரைப் பின் தள்ளினோம். இதனிடை என்ன நடந்தது எனத் தெரியவில்லை தீடீரென ஒரு இளைஞர், ”கொடியைத் தொடாதே, உன்னை............” என்று பாய்ந்தார். சற்றும் எதிர்பார்க்காமல் சற்றே தடுமாறினோம். மேலே பாய்ந்த அவரிடம் ஏன் இவ்வாறு என்று வினவ, உடனிருந்த அன்பர்கள் அந்த அன்பரைப் பின்னுக்குத் தள்ளி விட்டனர். அந்த அன்பர் ”கொடியை எவன் தொட்டாலும்” என்று உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டேயிருந்தார். தமிழா, ஒரு சிலரின் இந்த உணர்ச்சி தானே, போராட்டத்திற்கு, உனக்கு, நமக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. உணர்ச்சியைக் கட்டுக்குள் வைத்திருக்க நம் இனத்திற்கும் தனிப் பயிற்சி தேவை தானே? முதிர்ச்சியுள்ளோர் உதவுங்கள்.
பேரவைத் தலைவர் முத்துவேல் செல்லையாவும், நண்பர்களும் நமது முக்கியப் பணி குடியரசுத் தலைவருக்கு நமது ஆதங்கத்தைத் தெரிவிக்கவே, சிங்களவருக்கு அல்ல அன்பு கூர்ந்து பின் செல்லுங்கள், என்று மீண்டும் மீண்டும் வேண்டிக் கொண்டேயிருந்தனர்.
ஒரு தோழி இந்த அரணையும் மீறி வெளியே பாய்ந்தார். அதைக் கவனித்த இன்னொரு தோழி ஓடிப் போய் அவரைக் கட்டி அணைத்து அழைத்து வந்தார்.
இந்தத் தள்ளுமுள்ளுவின் ஒரு கட்டத்தில் உணர்ச்சி எல்லையின் விளிம்பில் இருந்த ஆதரவாளர்களைத் தடுக்கப் போராடிய ஒழுங்குநர்களுடன் (Croud Controllers) திரண்ட நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
தடுக்கத் திரண்ட நண்பர்கள் பெயர் தெரிந்தால் அன்பு கூர்ந்து பதிவு செய்யுங்கள் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். திரண்ட ஒவ்வொரு நண்பருக்கும் என் நன்றி!!!!
ஆர்ப்பாட்டம் அமைதியாக முடிய அவர்களின் பங்கு மிகவும் போற்றத்தக்கது.
வெற்றிகரமாக பேரணிக் குழுவின் இரண்டாம் சுற்றையும் முடித்தவுடன், திடலில் இருந்த மக்கள் கூட்டம் பேரணியின் சிறப்புப் பேச்சாளர் உரைக்காக அமரத் தொடங்கினர். சிறப்புரை தொடங்கியது.
நண்பர் சரவணன் இன்னும் மதிய உணவு முடிக்க வில்லை என்று நினைவு படுத்தினார். பாண்டியனையும் அழைத்துக் கொண்டு காவலர் உதவியுடன், அருகில் இருக்கும் துரித உணவகம் ’சப் வே’ க்கான வழியைத் தெரிந்து கொண்டு உணவருந்தச் சென்றோம்.
நிகழ்ச்சியின் முடிவில் சுந்தர் குப்புசாமி, நீள்வட்டப் பூங்காவை தேர்ந்தெடுத்ததற்கான செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூற்று முற்றிலும் ஏற்புடையதாகவே இருந்தது லெஃபாயெட் பூங்காவை விட, நீள்வட்டப் பூங்கா கொள்ளளவிலும் பெரிதே.
ஏறத்தாழ 12000 தமிழாதரவாளர்கள் கலந்து கொண்டனர் என்றால் அது மிகையாகாது. சிங்கள ஆதரவாளர்கள் 200க் குறைவாகக் காணப்பட்டது தமிழ் உணர்வாளர்கள் மிகவும் பெருமைப்படும் விதம் அமைந்தது.
பேரவைத் தலைவர் செல்லையா, நளாயினி, யூட்டா தமிழ் சங்க நண்பர்கள் விவேக், நடராசன், முருகேசன் அவர்களுடன் செயற்பாடுகள், பணிகள் பற்றி உரையாடிவிட்டு, 6 மணி அளவில் ஒகயோ குழுவினருடன் பேருந்துகள் கொலம்பசு பயணத்தைத் தொடங்கியது.
பயணம் நிறைவடையுமுன், ஏற்பாட்டுக்கு ஆதரவாயிருந்த முரளி, ஆண்டன், கொலம்பசு, சின்சினாட்டி தமிழ்ச் சங்க, மற்றும் எல்லா ஆதரவாளர்களுக்கும், சுசிலாவும், ரஞ்சனும் நன்றி தெரிவித்தனர். கொலம்பசு தமிழ்ச் சங்கத் தலைவர் சரவணன் நன்றி கூறி எங்களை அந்நியப் படுத்தாதீர்களேன் என்று அன்பாக வேண்டிக் கொண்டார்.
பிரியுமுன் சின்சினாட்டி பாலா “எண்பதுகளுக்குப் பின் எனது இளைய தலைமுறை மேல் மீண்டும் நம்பிக்கை கொள்ளும் வகையில் அமைந்த பேரணி” என்றது அனைவரும் ஏற்கக் கூடிய உண்மை. எண்பதுகளில் என்ன நடந்தது என்றே தெரியாமல் பேசும் சில ஆதரவாளர்முன் சின்சினாட்டி பாலா சொற்களால் மட்டுமல்ல செயலாலும் முன்னவர் பங்களிப்பை மதிக்கும் பெரியோராகவே எனக்குத் தென்பட்டார்.
பேருந்தின் கடைசி நிறுத்தத்திலிருந்து தம்பி தமிழன் உதவியுடன் இல்லமடைந்து, மகன் கவினின் அறை சென்று முத்தமிட்டேன். அந்த இளங்காலையிலும் அப்பா என்று அணைத்த அன்பால் கட்டுண்டு அவனுடனே உறங்கிப்போனேன், அடுத்த விடியலாவது எம் இனத்திற்கு விடிவைக் கொடுக்காதா என்ற ஏக்கத்தோடு.....
.கவி.
9 comments:
அன்பின் கவி,
காட்சிகளை வரிசைப்படுத்தி எழுதி அருமையாகக் கண்முன் கொண்டு வந்துள்ளீர்கள்.
நன்றி - சொ.சங்கரபாண்டி
அண்ண்ன் கவி :
உங்கள் முதல் பதிவுக்கு என் வாழ்த்துகள். உஙகள் பதிவு மிகவும் பயனுல்லதாக இருந்தது.. தொடர்ந்து எழுதுஙகள்.. நன்றி !
அன்புடன்,
வெற்றி பாண்டியன்
அன்புள்ள கவி,
அருமையான, ஆனால் சற்று நீண்ட பதிவு. உங்கள் கண்ணோட்டத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை என்ன நடந்தது என்பதை படம் பிடித்தது போல் வடித்துக் காட்டியுள்ளீர்கள். சற்று வேகமாகப் படித்து மகிழ்ந்தேன். வரலாறு படைத்த அந்த வாசிங்டன் மாநகர் பேரணியில் நீங்கள் ஆற்றிய பணிக்கு மிக்க நன்றி.
முத்து(வேல் செல்லையா)
Dear Kavi,
I don't have the software to type/write in Thamil so I am writing it in English. Good luck to your effort! Thanks for taking time and effort to contribute to the people. Again wishing you good luck and keep up the good work! - Thanks! P.Kannan
தமிழ் உலகம் மடற்குழுவிலிருந்து...
--- On Tue, 2/24/09, Saravana Rajendran wrote:
From: Saravana Rajendran
Subject: Re: [தமிழ் உலகம்] வாசிங்டனில் வெற்றிப் பேரணி- என் பயண அனுபவம்
To: tamil_ulagam@googlegroups.com
Date: Tuesday, February 24, 2009, 10:43 AM
அய்யா இந்திய அரசியல் வாதிகள் ஈழமக்களின் ரத்தம் கண்டு ஏளம் செய்கின்றனர். ஒன்றா இரண்டா அரை டஜன் இளைஞர்கள் தீயிட்டு கொண்டனர். ஆனால் அவை எல்லாம் டெல்லி வாலாக்களின் குளிர் காயும் நெருப்பாகி போது தமிழக தலைவர்களோ பழம் பெரும் கதை பேசி நான் அன்று செய்தேன் அப்படி செய்தேன் என்று வெந்த புண்ணில் வேர்பாய்ச்சி கொண்டிருக்கின்றனர். போதாக்குறைக்கு போராட்டங்களை எப்படி திசை திருப்பலாம் என்று ஒரு டீமே செயல் பட்டுகொண்டிருக்கிறது. அரசின் உதவியோடு
பல ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொண்ட அமைதி பேரணி ஒரு நாளேடு கூட போடவில்லை.
இத்தனைக்கும் இந்த பேரணியை நடத்தியவர் சொன்னால் தமிழன தலைவர் தட்ட மாட்டார் அவ்வளவு செல்வாக்கு அவர் நடத்திய போராட்டதை பத்திரிக்கைகள் மறைத்தது என்ன காரணம் என்று புரிந்திருக்கும்ஆனால் அயல் நாடுகளின் எம் தமிழ் மக்களின் உணர்வுவலைகளுக்கு மேலை நாடுகளும் ஆஸ்திரேலிய நாடும் செவிசாய்த்து விட்டது. இன்று இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்பது ஆரம்பம் தான் இனி அழுத்தங்கள் அதிகரிக்கும் எம்மவர் காக்கபடுவார்கள் என தமிழர்களின் உள்ளங்களின் ஓரத்தில் நம்பிக்கை ஒளி பிறந்திருக்கிறது. இந்த தருனத்தில் அனைவருக்கும் மும்பை தமிழர்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
"யாதும் ஊரே யாவரும் கேளீர்"இந்திய அரசியல் வாதிகளை தேர்தல் என்னும் போர்க்களத்தில் சந்திக்க தமிழர்கள் தயாராகி வருகிறார்கள்.
------------------------ எனது பதிலும்---------
அன்புள்ள திரு. சரவண ராஜேந்திரன்.
விடுங்கள்.... பூனைகள் கண்களை மூடிக் கொண்டால், உலகம் இருண்டுவிடாது தானே....
வாசிங்டனில் நமது உணர்வுப் பேரணி, வாசிங்டன் நகர மக்கள் இதுவரை கண்டிராத பேரணி என்றால் அது மிகையாகாது.
நானும் நண்பர்களும் பேரணி முடிவில் “ஸ்டார்பக்ஸ் காபி’ யில் “சாய்” வாங்கச் சென்றபோது அங்கிருந்த அமெரிக்கப் பெண்மனி ஆச்சரியத்துடன் பகிர்ந்து கொண்டது இச் செய்தி. பதிவு பெரிய பதிவாகிவிட்டதால் பல செய்திகள் விடுபட்டுள்ளன.
தமிழ் உலகத்தில் ஆதரவுக் குரல் எழுப்பும் அன்பர்கள் உள்பட, அமெரிக்காவில் இருக்கும் பல நூறு, ஆயிரம் ஈழ ஆதரவாளர்களால், இயலாமையால் பங்கு கொள்ளவில்லை.
கடுங்குளிர், வேலைநாள். கனடாவில் இருந்து வர வேண்டிய பல பேருந்துகள், கடைசி நிமிடத்தில் நிறுத்தப் பட்டதாக செய்தி என்று பல உண்மைகள் புதைந்து கிடைக்கின்றன். குழுக் குழுவாக செனட்டர்களைச் சந்திக்கச் சென்ற பெருமக்கள், பத்திரிக்கையாளர் கூட்டம் என்று பல நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளன்.
இவற்றுக்கெல்லாம் அமெரிக்க அரசு நிச்சயம் கவனம் செலுத்தம் என நம்புவோமாக. இன்றும் வாசிங்டனில் இதற்கான முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
இந்திய அன்னை ஏற்க மறுக்கும் நம் கோரிக்கைகளை அமெரிக்க அன்னை ஏற்பாள் என நம்புவோமாக.
அன்புடன்
.கவி.
வெற்றிப் பயணம் கட்டுரை படித்தேன். அருமையாகப் பதிவு செய்தமைக்கு முதலில் வாழ்த்துக்களும் பாராட்டுகளும். தங்களைப் போன்றவர்களின் முயற்சிகள் ஒருங்கிணைப்படும்போதுதான் ஈழத்தில் அமைதி நிலவும்.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்
நண்பர் கவி,
"பூனைகள் கண்களை மூடிக் கொண்டால், உலகம் இருண்டுவிடாது தானே...." - மிகவும் உண்மை!
தங்களது இந்த வலைப்பதிவு முயற்சி வளர்ந்து வெற்றிபெற என் வாழ்த்துக்கள்!
நன்றி,
பெ.கண்ணன்.
அன்புமிக்க கவி,
உணர்வுமிகு போராட்டம்,அணிவகுப்பு நடந்துள்ளமையை அழகாகச் சொல்லோவியப்படுத்தியுள்ளீர்கள்.
நானும் அணிவகுப்பில் கலந்துகொண்டதுபோன்ற
உணர்வு ஏற்பட்டது.ஈழத்தமிழர் தன்னுரிமை பெறும் நாளை எதிர்பார்த்துள்ளோம்.
நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற சிறு பணியையேனும் செய்வோம்.நன்றி.
அன்புடன்,
மறைமலை இலக்குவனர்
--- On Sat, 3/7/09, N. Ganesan wrote:
From: N. Ganesan
To: "மின்தமிழ்"
Date: Saturday, March 7, 2009, 9:36 AM
அன்பின் கவி,
தமிழ் அன்பர்களின்
மின்மடல்களை, வலைப்பூக்களைப்
படிக்கும்போது
அவர்களின் தமிழ்ப்பயிற்சி,
நூற்பயிற்சி தெற்றென
விளங்குகிறது.
மின்குழு மடல்கள்,
வலைப்பதிவுகள் பல்லாயிரக்
கணக்கான
தமிழர் எழுதினால் தமிழ்
மேம்படும். உங்களின் நல்ல
கருத்துக்கள்,
ஆழமான சிந்தனைகளைப்
பல்லாண்டுகளாகப்
படித்துவருகிறேன்.
முன்பெல்லாம் அதிகம்
ஆங்கிலத்தில் எழுதுவார்கள்.
அண்மையில் உங்கள் சிறந்த
வலைப்பூவைப் பார்த்தேன்.
வாஷிங்டன் செலவு அனுபவங்கள்.
செந்தமிழும் நாப்பழக்கம்
என்றாள் ஔவைக்கிழவி.
இனியெல்லாம் செந்தமிழும்
கணிப்பழக்கம் தான்!
அன்புடன்,
நா. கணேசன்
------------------------------
என் பதிலுரை:
--------------
அன்புள்ள கணேசன் ஐயா தங்கள் அன்பான
மதிப்புரைக்கு நன்றி.
நக்கீரரிடம் நல்லாசி பெற்றமையும், வசிட்டரே (வசிஷ்டர்), பிரம்ம ரிசி(ஷி) பட்டம் வழங்குவதும் இரட்டை மகிழ்ச்சி தானே :)
தங்களின் மதிப்புரையையும் பின்னூட்டில் இணைத்து விட்டேன்.
Post a Comment