Sunday, March 8, 2009

தேவையா மகளிர் தினம்..?

தேவையா மகளிர் தினம்..?


என் அக்கா ஜனித்த போது தான்
அன்னை முகம் வாடினாள் - ஆம்
பாட்டி முதலே பெண்ணா என
அன்னை முகம் திருப்பி அழுதாள்


என் தங்கை உதித்த போது தான்
பால் தராமல் காக்கப் போராடினாள்- ஆம்
கள்ளிப் பால் தராதே என
அன்னை கதறிப் போராடினாள்


என் அக்காளுக்கு மாமன் கட்டிய
தாலியை கண்டு மகிழ்ந்த நான்
மாமனுக்கு அக்காள் கட்ட வேண்டிய தாலியை
இன்றும் தேடிக் கொண்டுருக்கின்றேன்


என் பாட்டன் மறைந்தது முதல் பாட்டி
கட்ட மறந்த பட்டுச் சேலைகளையும்
வைக்க மறந்த சிவப்புப் பொட்டினையும்
சூட்ட மறந்த பூவினையும் என்ன செய்வதென அறியாமல்


மகளிர் நாள் மாற்றம் தரும் நாளோ என
மாறுதலுக்காக காத்திருந்தேன்
மகளிர் தினம் வந்து போனது பலமுறை
மாற்றம் எந்த நாள் என இன்றும் தேடுகிறேன்...


தாயாக தாரமாக தன்னுயிர் மகளாக
தமக்கையாக, தங்கையாக என்னுள் இணைந்த
எம்மகளிர் இதை நிறுத்தவியலா நீயொரு
ஆண்மகனா எனக் கேலியுடன் நோக்க

ஆம் தோழர்களே! எனக்குத்
தேவையே இந்த மகளிர் தினம்!!!
என் இனத்தைப் பெருக்கும் என் பேத்தி
என்னை ஆண் மகன் என்று ஏற்கும் வரை!!!!!!!!!!


.கவி.



( எதிர்மறையாக எழுத வேண்டும் என எழுதவில்லை,

தங்களின் கருத்தையே என் மனையாளும் சொன்னார் ஏன் முழுக்க எதிர் மறை என்று....

ஆனால் சில உண்மைகள் எதிர்மறையாகத் தானே உள்ளன, நாம் மாற வேண்டுமெனில் அவற்றை உணர்ந்து தானே ஆக வேண்டும் என்றதும் சரி என ஒப்புதல் தந்த விட்டார், தாங்களும் இக்கருத்தை ஏற்பீர்கள் என நம்புகின்றேன் )

No comments:

Post a Comment