Sunday, March 29, 2009

திமுக ஆதரவாளர் என்று நிந்திக்கும் தோழர் கவனத்திற்கு

திமுக ஆதரவு என்று என்னை/எங்களை நிந்திக்கும் அன்புத் தோழர்களே

என்னை / எங்களை அறிந்தவர் அறிவர்.

நாங்கள் என்றும் மறைத்ததில்லை.

நாங்கள் எவர் என்றும் 'பார்ப்ப' தில்லை.

தமிழுக்கு/ தமிழினத்திற்கு என்றால் எங்கள் ஆதரவு என்றும் இருக்கும்.

அது எவராயினும் சரி.

எதிர்த்து எம்மையே அழிக்கத் துடிக்கும், எம் நண்பர்களுக்கும், எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.

தாயின் ஈரக்குலையை, காதலிக்கு வெட்டி எடுத்துச் சென்ற மகனின் கதை நினைவுள்ளதா தோழர்களே? கல் தடுக்கிய மகனைக் கண்டு பதறிய ஈரக்குலைத் தாய் நாங்கள் தோழர்களே.

தன் பிறப்பையும், மனையாளின் கற்பையும் சந்தேகிப்பது எளிது தானே தோழா? நம்பிக்கை தான் அதன் மூலம்.

எங்களை எதிர்க்கும் எம் தமிழின நண்பர்களை ஒழிக்கும் கோட்பாட்டில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

ஐம்பது காலத் தமிழ் உணர்வைப் பல அரசியல் மாற்றங்களுக்கிடையும் இன்றும் களத்தில் இறங்கிப் போராடும் வழியில் வந்தவர்கள் நாங்கள்.

நெருக்கடி நிலை / இராசிவ் மரணம் எனப் பல தமிழின உணர்வு அழிப்பு நிகழ்வுகளையும் மீறி எப்படி எங்கள் மண்ணில் இந்த அளவாவது தமிழ் உணர்வு தழைத்தோங்குகிறது என்று எண்ணுகின்றீர்கள்.

மந்திரத்தில் மாங்காய் காய்க்கவில்லை தோழர்களே

மற்றவரின் பணிகளை அறிய மறுப்பது அல்லது மறப்பது.

இது தான் தமிழினத்தின் மிகப் பெரிய வீழ்ச்சி.

திரை தவிர்த்த எத்தனை தமிழ் அறிஞர்களுக்கு நாம் உதவியுள்ளோம். சிந்தித்துப் பாருங்கள். தமிழுக்காக தன்னையே அர்ப்பணிக்கும் அவரின் தேவையைப் பூர்த்தி செய்பவர் யார்? பொருளாதார வசதி படைத்த நாம் அவருக்கு உதவியிருக்கலாமே? உதவினோமா? நீங்கள் அளித்த ஒரு சில பத்து/நூறு டாலருக்காக, அறிஞர்கள் உங்களுக்கு விலை போய்விட்டார் என்று பேசுவதும்/எழுதுவதும் சிறுமைத் தனம் தானே தோழர்களே.

இது தான் நிசம் தோழர்களே. எவரும் ‘பொம்மலாட்டி பொம்மைகள்' அல்ல, நம் நூலிழையில் ஆடுவதற்கு.

நீங்கள் களத்தில் போராடுபவர்களின் தேவைகளை அறிய முயற்சிப்பதும் இல்லை. ஆதரிப்பதும் இல்லை.

மாடப் புறாவக இருந்து சிந்திக்காமல், மண் புறாவாக மாறிச் சிந்திக்க வேண்டும் தோழா, அப்போது தான் அந்த வலிகள் புரியும். மிகக் குறைந்த பட்சம் அந்த மண்புறாக்களுக்கு வாழ உதவும் வள்ளலாக இருந்து பாருங்கள் தோழர்களே, வங்கியில் இருக்கும் காசு வழியில் இறைக்கப் படும் போது தான் வலி புரியும்.

பிரெஞ்சுப் புரட்சியில் அரசியின் “ரொட்டித்துண்டு” வசனம் நினைவில் உள்ளதா தோழா? அந்த அரசி தவறாகப் பேசவில்லை, அறியாமையில் பேசினார், ஏனெனில், அந்த மாடப் புறா களத்தில் மக்களுடன் வாழவில்லை, அதனால் மக்களின் வலி அறியவில்லை.

1991லிருந்து இன்று வரை ஈழத் தமிழர் ஆதரவு எப்படி தமிழ் மண்ணில் மீண்டும் நிலை நிறுத்தப் பட்டது என்று நினைக்கிறீர்கள்.

நீங்கள் வேரை மறுக்கலாம், மறந்திருக்கலாம். எங்களால் முடியாது, ஏனெனில் அந்த வேரை சில 'தன்மானத் தமிழர்' வெட்டி எறிய முயன்ற போது, எங்கள் உழைப்பை எங்கள் கைக் காசை இழந்து போற்றிப் பாதுக்காத்த சிறுகூட்டத்தில் சிலர் நாங்கள். இது போன்ற பல சிலர் உள்ளனர். மாடப் புறாக்களுக்கு அறிய வாய்ப்பில்லை தானே தோழர்களே.

இக்கரையிலிருந்து அக்கரை பச்சையாகத் தான் தெரியும். அக்கரையில் உள்ளவர்களின் அக்கரையின் கறைகளை அறிய/ அகற்ற முயலலாமே.....

மேலும் மேலும் எழுதலாம். எப்படியும் பின்னூட்டலில் மீண்டும் நிந்திக்கப் படுவோம். அப்போது தங்களுக்கு மீண்டும் விளக்குகின்றேன் :)

உடல்,உள்ளம், பொருள் என எல்லாவற்றையும் இழந்து ஈகைத் தியாகம் செய்யும் மண் எம்மண்.

தி. மு.க. வை ஆதரித்து எழுதினால், இப்படித்தான் பதில் வரும் என நான் எதிர்பார்த்ததே, அதனால் எனக்கு வலியில்லை :)

71ல் இருந்தே இதே நிலை தான், ஆட்களும் / நிலைகளும் தான் மாறுபடுகின்றன. என்னுடைய மடலில் தோழர்களை நிச்சயம் நான் சிறுமைப் படுத்த வில்லை. அது எனது நோக்கமுமல்ல.

தன் இனப் பெரியோர்களை மற்றவர்கள் எப்படி மதிக்கின்றார்கள். நாம் வளர்ந்தவுடன் முதலில் எட்டி உதைப்பது நம் இனப் பெரியோர்களை. திருந்த வேண்டாமா தமிழினம்? குறிப்பாக அமெரிக்கத் தமிழரின் மாடப் புறா மனப்பான்மையில் மாற்றம் வேண்டாமா?

ஈழம் குறித்து கலைஞரை எதிர்க்கும் நிலையில் எனக்கு உடன் பாடில்லை. ஈழத்திற்கு எப்படி நாம் ஈழத்தவர் தேர்ந்தெடுக்கும் தலைவரை ஏற்கின்றோமோ, அதே போல் ஈழத்தவர் தமிழர்களின் தமிழகத் தலைவரை ஏற்க வேண்டும். ஏற்க மறுப்பது ஈழத்தவரின் / ஈழ ஆதரவாளரின் பெரும் தவறு என்பது என் கருத்து. தமிழக அரசியலில் ஈழத்தவர் அவசியமில்லாமல் நுழைவது ஈழத்து விடுதலையில் தொய்வு ஏற்பட ஏதுவாகும்.

துடிப்பான இளைஞர்கள் நமது சமுதாயத்தின் இன்றைய தேவை. அன்பு கூர்ந்து பின் நோக்கிப் பார்த்து பின் பயனியுங்களேன்.

நாம் நடக்கும் இந்தப் பாதை எத்தனை பெரியோர்களால் வழிவழியாக செப்பனிடப்பட்டது என்பதை நாம் உணர்ந்தோமானால் நமக்கும் நல்லது, நமது சமுகத்திற்கும் நல்லது. அதை உணராமல், கண்ணாடி மாளிகைக் கல் எறிதலால் யாருக்குப் பயன்?

”யாகாவா ராயினும் கைகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு”

எங்களை நிதானித்து நிந்தியுங்கள் தோழர்களே!

நட்புடன்
.கவி.

No comments:

Post a Comment