Sunday, April 26, 2009

தேர்தல் 2009 : நேற்று - இன்று - நாளை : சோனியா, பிரியங்கா, ராகுல்

தேர்தல் 2009 : நேற்று - இன்று - நாளை : சோனியா, பிரியங்கா, ராகுல்

சோனியா, பிரியங்கா, ராகுல் கவனத்திற்கு

நேற்று:

நிறைகள் :

1. இந்திய விடுதலையில் பெரும் பங்காற்றிய மோதிலால், ஜவகர்லால்.
2. வங்க விடுதலையில் பெரும் பங்காற்றிய இந்திரா, தமிழீழ விடுதலையில் தனிக் கவனம் கொண்டவர்.
3. தமிழர் நலனில் அக்கறை கொண்டதனால், சிங்கள வெறி ராணுவத்தினரால் தாக்கப் பட்ட ராஜீவ்

குறைகள் :

1. கச்சத்தீவை இலங்கைக்கு இலவசமாக அளித்தல்.
2. தமிழரின் ஆதரவின்றி, அதிகார வர்க்கத்தினால் உண்மை நிலை அறியாமல் திணிக்கப் பட்ட ஒப்பந்தம்.
3. அமைதிப் படையின் அத்து மீறல்களால் தமிழக மண்ணின் துயரத்தை முழுமையாக அறியாமை.
4. உணர்ச்சி மிகுதியால் பாதிக்கப்பட்ட சில தமிழர்களின், தவறான முடிவால் பாதிப்பு.

இன்று:

குறைகள்:

1. ராஜிவை இழந்த துயரத்தை ஈடு கட்ட, தமிழரை அழிக்கத் துணை போகின்றீர்கள் என்ற குற்றச்சாட்டு.

2. இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்துடன் இணைந்து தமிழர்களை கொத்துக் கொத்தாக கொலை செய்கின்றனர் எனப் பல புகைப் படங்கள்/ காணோளிகள்.

3. தமிழர் சிக்கல் அறியாத அதிகார வர்க்கத்தின் தவறான வழிநடத்தல்.

4. இலங்கை அரசின் ஈவு இரக்கமற்ற மனிதக் கொலைகள்.

5. ஈழ நிலையை தங்களிடம் தவறாக விளக்கிய அல்லது விளக்கவே தைரியமற்ற தமிழகக் காங்கிரஸ் தலைகள்

நிறைகள்:

1. தமிழர் விடுதலையில் ஆதரவு, நட்புணர்வு

2. பல ஆயிரம் தமிழ் மக்கள் / ஈழ மக்கள் இந்தியாவின் உதவிக் கரம் தங்களின் இன்னுயிரைக் காக்கும் என இன்னும் நம்பி நிற்கும் ஏக்கம்.

3. தமிழக அரசியலில் அதிமுக, பாஜக, கம்யூணிஸ்ட் என அனைத்துக் கட்சிகளும் ஈழ விடுதலைக்கு ஆதரவுக் கரம்.

நாளை:

1. ராஜிவை இழந்த பாவத்திற்காக, ஒரு இன அழிவைத் தடுக்கத் தவறிய பெருங் குற்றத்திற்கு ஆளாக நேரிடும் பெரும் அபாயம்.

2. இந்திய ராணுவம் பங்கு கொண்டு தமிழ் மக்களை அழிக்கின்றது என்பதை இதுவரை ஆதாரத்துடன் மறுக்காதது ,எதிர்காலத்தில் தங்களின் விடுதலைப் பரம்பரைக்கு பேரிழுக்கு.

இந்த இழுக்கை நாளைய வரலாற்றில் இடம் பெறாமல் தடுக்கும் பொறுப்பு தங்களுக்குள்ளது தானே....

தேர்தலில் வெற்றி தோல்விகள் மாறலாம், ஆனால் தங்களின் இக்கால நிலைக்கு வரலாறு எவ்வாறு தங்களை நோக்கும்?

ஆயிரக்கணக்கான மக்களின் இரத்தம் குடிக்கும் அழிவைத் தடுக்காமல், நீங்கள் வாய் மூடி மௌனியாக இருந்தீர்கள் என வரலாறு கூறுவதைத் தவிர்க்கும் வாய்ப்பு இன்னும் உள்ளதே.

தான் பாதிக்கப் பட்டாலும், மனித இனத்தைக் காக்கும் பெரும் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்டீர்கள் என வரலாற்றில் அறியப் படுவீர்கள் தானே.

உடன் செயல் படுங்களேன்....

சிந்திப்பீர்கள். செயல் படுவீர்கள் என்று இன்னும் நம்பும்

இந்தியத் தமிழன்
.கவி.

Saturday, April 25, 2009

தேர்தல் 2009 : நேற்று - இன்று - நாளை : புரட்சித்தலைவி ஜெயலலிதா

தேர்தல் 2009 : நேற்று - இன்று - நாளை : புரட்சித்தலைவி ஜெயலலிதா கவனத்திற்கு

நேற்று:

நிறைகள் :

1.தமிழகத்தில் திமுகழகத்திற்கு மாற்றுக் கட்சியாக, பல தலைமுறை அரசியல் தலைகள் கண்ட கலைஞக்கே மாற்றாக தமிழக அரசியலில் வலம் வரும் பெரும் சக்தி.

2. தமிழீழ விடுதலைக்காக நவம்பர் 30, 1995 ல் பெருங்கவிக்கோ வா.மு.சே. தலைமையில் தமிழகம் தழுவிய ஈழ ஆதரவு முழு அடைப்புக்கு ஆளுங்கட்சியாக தாங்களும் அதிமுகவும் ஆதரித்தது.

3. தமிழ் பிராமணர்கள் தமிழ்நாட்டில் புறக்கணிப்படுகிறார்கள் என்ற சிலரின் தவறான பொய்ப் பிரச்சாரம் தமிழக மக்கள் தங்களை முதல்வராக்கியதன் மூலம் முறியடிக்கப் பட்டது.

4. சரியென்று பட்டதை செய்து முடிக்கும் துணிவு.


குறைகள் :

1. மொழியை விட மதம் பெரிது என்பது போல் தங்களின் சில நிலைப் பாடுகள்.

2. பட்டறிவு மிகுந்திருந்தும், பகுத்தறிவை ஒதுக்குவது.

3. சேதுக் கால்வாய் திட்டத்திற்குத் தங்களின் திடீர் எதிர்ப்பு, தேர்தலுக்கு மட்டும் எனில் சரி. ஆனால் நம் மண்ணின் வளர்ச்சிக்கு எனில் அதை நாம் ஆதரிக்கத் தானே வேண்டும்.

4. மக்களுக்கும் தங்களுக்கும் இடையில் தேவையற்ற இடைத் தரகர்களுக்கு இடம் கொடுத்தல்.

இன்று:

குறைகள்

1. பக்தியில் பெரும் ஈடுபாடு கொண்ட தாங்கள் முதல்வராயிருந்தும் நம் அன்னைத் தமிழ் இன்றும் கோயில் கருவறையை எட்டாமை.

2. தமிழ் உணர்வே முதல் என்ற நிலைப்பாடு தங்களிடம் இன்னும் இடம் பெறாமை.

3. மக்களின் உணர்வுகளைத் தங்களிடன் சரியாக எடுத்துரைக்காத தலைகள்.

4. தங்களை விட வயதில் பெரியவர்களும் காலில் விழுந்து தங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த்தும் விபரீதம். ஆசி பெறுவது உடன்பாடே, ஆனால் தங்களை விடப் பெரியவர்களும் தங்களிடம் ஆசி பெறுவது தவறு தானே?

நிறைகள்:

1. தவறென்றால், ஆச்சாரியர்களையே எதிர்க்கும் தங்கள் துணிவு.

2. ஒரு சில பதவிகளுக்காக தங்களை மீண்டும், மீண்டும் தேடி அடையும்
தமிழகக் கட்சித் தலைகள்.

3. தனித் தமிழ் ஈழம் என்ற கொள்கையில் தங்களின் இன்றைய நிலைப்பாடு.

பக்தியில் திளைத்த தாங்கள், நம் ஆலயங்களில் அன்னைத் தமிழை ஏற்றுங்களேன்.

நம் தமிழ் மண்ணில் உள்ள ஆலயங்களில் ஆரிய மொழி, அன்னைத் தமிழுக்கு அடுத்த நிலை தான் என்ற நிலையை உருவாக்குங்களேன்.

நம் மொழி காக்கும் பெரும் பொறுப்பை நீங்களும் ஏற்றுச் செயல்பட்டீர்கள் என வரலாற்றில் அறியப் படுவீர்கள் தானே.

உடன் செயல் படுங்களேன்....

சிந்திப்பீர்கள். செயல் படுவீர்கள் என்று நம்பும்

பக்தித் தமிழன்
.கவி.

Sunday, April 19, 2009

தமிழர் ஆதரவும் - தேர்தல் 2009 ம்

தமிழர் ஆதரவும் - தேர்தல் 2009 ம்

”தமிழர் ஆதரவு” - நடுநிலை என்று கலைஞர்/தி.மு.க. எதிர்ப்பு செய்திகளை மட்டுமே தேர்தல் 2009 நேரத்தில் குழுமங்களில்/ வலைப் பூக்களில் மிகுந்து ஒலிக்கும், எழுதும் எமதன்புத் “தமிழர் ஆதரவு” நண்பர்களே!

”யானையும் ஐந்து குருடர்களும்” ”கதை” யைத் தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

கதையை நினைவில் நிறுத்தி, பின் சிந்தியுங்கள்.

யானையின் பெருத்த காலை மட்டும் தடவிக் கொண்டு, கருத்துக்களை அள்ளித் தெளிக்கின்றீர்களே, நியாயமா?

நாம் சகோதரர்கள். நமக்குள் வேறுபாடு இருந்தாலும், சகோதர்கள் அழிப்புக்கு ஆதரவு அளிப்பது தவறு என்பது என் கருத்து.

நிதானியுங்கள்............ ......

உங்களின் சிறு துளியை விழலுக்கு இறைத்து வீணடிக்காதீர்கள்.

சிறு துளி பெறவே போராடும் இனமாக நம்மினம் இன்னும் இருக்கும் போது, விலை மதிப்பற்ற தங்களின் சிறு துளிகள் வீணாவது கண்டு வேதனையடைகிறேன்.

நம் சமூகத்திற்குழைத்த தந்தை பெரியாரையே இன்னும் புரிந்து கொள்ளாத நல் இனம் நம் தமிழினம்.

மறுக்க இயலுமா உங்களால்?

அவரின் சமுக உயர்வுப் பணிகளைப் புறந்தள்ளி, கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் முன் நிறுத்தியதால் நம் இனம் பெற்ற பெரும் இழப்பு இது என்பது என் கருத்து.

இன்று அமெரிக்கா வரை வந்து கூவும் தமிழினம், தன்னைக் கூவும் நிலக்கு உயர்த்திய சமுகப் புரட்சியாளர்களை மறந்தது ஏன்?

கணினியில் தமிழைக் கொண்டு வந்த நாம், கடவுளிடம் இன்னும் சேர்க்கவில்லை.

ஏன்? சிந்தித்துப் பாருங்கள்.

உங்கள் இல்லத்து அரசிகளை மாற்ற முடிந்ததா உங்களால்?

“நாமென்ன செய்தோம் என்று முதலில் சிந்தியுங்கள், மற்றவரென்ன செய்தார் என்பது இரண்டாம் பட்சமே”...........

கூட்டத்தோடு கூட்டமாக ’கூவும்’ நண்பர்களே, தமிழ் / தமிழரென்றால், அவர்களின் நலன் என்றால், கலைஞர் / திமுக தான் இன்று வரை முன்னிலையில் உள்ளது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

அன்பு கூர்ந்து சிந்தியுங்கள்....

குறைகளை மட்டும் நோக்காமல் நிறைகளையும் நோக்குங்களேன்.

குறைகளையும் /நிறைகளையும் பண்புடன் பட்டியலிடுங்களேன்.

பின் நாம் அன்புடன் நோக்கலாம்.


அன்புடன்.
.கவி.

Monday, April 6, 2009

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் திருக்குறள் செம்மொழி உரை


நன்றி -விடுதலை

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் திருக்குறள் செம்மொழி உரை நூல் வெளியிட்டு, தமிழர் தலைவர் சிறப்புரை

சென்னை, பிப். 10- பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமனின் திருக்குறள் செம்மொழி உரை நூலை தமிழர் தலைவர் வெளியிட்டு, இந்நூலை, வாழ்வியல் கருத்துரை நூலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என சிறப்புரையாற்றினார்.

நேற்று (9.2.2009) மாலை சென்னைப் பல்கலைக்கழகம் (விரிவு) பவள விழாக் கலை அரங்கில், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில், பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் எழுதிய திருக்குறள் செம்மொழி உரை நூல் வெளி யீட்டு விழா நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக திருமதி வாசுகி கண்ணப்பன், கவிமுரசு வா.மு.சே. திருவள்ளு வர் ஆகியோர் வரவேற்புரை யாற்றினர். சிலம்பொலி செல் லப்பனார் தலைமை தாங்கி னார். சென்னை முன்னாள் மேயர் சா.கணேசன் முன்னிலை வகித்தார். முனைவர் மறை மலை இலக்குவனார் தொடக்க உரையாற்றினார்.

பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமனின் திருக்குறள் செம்மொழி உரை உள்ளிட்ட மூன்று நூல்களை, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுப் பேசியதாவது:

பெரியார் பெருந்தொண் டன் என்ற முறையில் இந் நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். திருக்குறளைப் பரப்ப வேண்டும் என்று தந்தை பெரியார் சொல்லியிருக்கின்றார்.

தமிழக வரலாற்றில் புத்தர், திருவள்ளுவர், தந்தை பெரியார் ஆகியோர் அறிவைச் சொல் லிக் கொடுத்தவர்கள். எந்த நூலாக இருந்தாலும் சமு தாயத்தை மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும்.

பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமனின் திருக்குறள் செம்மொழி உரை நூல், வாழ்வியல் கருத்துரை நூலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


வா.மு.சேதுராமன் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் பல் லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று தமிழர் தலைவர் இந் நூலை வெளியிட்டு வாழ்த் துரை வழங்கினார்.

முன்னதாக இந்நூலை தமிழர் தலைவர் வெளியிட, ஆ.சந்திரசேகர், கவிஞர் புரட்சிதாசன், பொன் இராசேந் திரன், புலவர் பி.துரைசிங்கம், புலவர் செந்தமிழ்ச் செழியன், சரஸ்வதி, வாசுகி கண்ணப்பன் மற்றும் பலர் பெற்றுக் கொண் டனர்.
இந்நூல் வெளியீட்டு விழா வில், பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ச.முத்துக்குமரன், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் பேரா சிரியர் முனைவர் அ.இராம சாமி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பொறுப்பு அலுவலர் முனைவர் க.இராம சாமி, முனைவர் மின்னூர் சீனிவாசன், புலவர் செந்தமிழ்ச் செழியன், முனைவர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

நூல் வெளியீட்டு விழா தொகுப்புரையை நிலவு முத் துக்கிருட்டிணன் வழங்கினார். கவிஞர் கண்மதியன் நன்றியுரை கூறினார். தமிழக நூலக ஆணைய குழுத் தலைவர் கயல் தினகரன், டாக்டர் மு.அக்பர், புலவர் சி.சங்கரலிங்கம், சி. செங்குட்டுவன், பெரியார் மாணாக்கன், மடிப்பாக்கம் ஜெயராமன், செங்கை பூபதி, உடுமலை வடிவேலு, செம் மொழித் துறை உறுப்பினர் அரண முறுவல் அகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


நன்றி -விடுதலை