Sunday, May 10, 2009

ஃபீனிக்ஸ் எம் திமுக - 6 : தேர்தல் 2009

ஃபீனிக்ஸ் எம் திமுக - 6 : தேர்தல் 2009

ஈழத்தில் மீண்டும் ஒரு வேதனைச் செய்தி, 2000 தமிழ் மக்கள், இலங்கை இராவணுத்தால் கொலை செய்யப் பட்டனர்.

ஒரு நாடு தன் மக்களைக் கொன்று குவிக்கின்றது.

தன்னால் பாதுகாக்கப் பட வேண்டிய தன் நாட்டு மக்களை மீண்டும் மீண்டும் கொன்று குவிக்கின்றது.

1980ல் களில் அகதிகளாக பல மேலை நாடுகளில் தஞ்சம் அடைந்த ஈழத் தமிழர், இன்று அந்தந்த நாடுகளில் அரசியல் உரிமை பெற்று, பல அரசியல் பொறுப்புக்களிலும் பங்காற்றுகின்றனர்.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு எனப் புலம் பெயர்ந்த தமிழர் அந்தந்த நாடுகளின் கவனத்தை ஈர்க்கப் பெரும் முயற்சி எடுக்கின்றனர்.

சென்ற 2008, இறுதிக் காலாண்டில் தொடங்கிய இந்த எழுச்சிப் போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அயல் நாடுகளில் வாழும் தமிழகத் தமிழர்களும், இயன்ற அளவு ஈழத் தமிழருடன் இணைந்து பங்காற்றி, இது ஒரு உலகத் தமிழர் சிக்கல் என்று அந்தந்த நாட்டுக்கு உணர்த்துகின்றனர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, வெளியுறவுத் துறை செயலர் ஹில்லாரி கிளின்டன் மற்றும் பல ஐரோப்பியத் தலைவர்கள் குரல் கொடுத்தும் இந்த நிலை.

2000 தமிழர் கொல்லப்பட்டனர் என்ற வேதனைச் செய்தி.

1939ல் காந்தியடிகளின் வேட்பாளர் பட்டாபி சீத்தாராமையாவை தோற்கடித்து பேராயக் கட்சியின் தலைவரான நேதாஜி, ஒத்துழையாமையின் காரணமாக தலைவர் பதவியில் விலகி, தனிக் கட்சி கண்டார்.

இரண்டாம் உலகப் போரில் சப்பான், செர்மனியுடன் இணைந்து ஆங்கில ஆட்சிக்கு எதிராக போர்க்குழு அமைத்து இந்தியாவை படையெடுத்து வந்தார். இதன் நிகழ்வாக ஆங்கிலேய அரசின் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப் பட்ட நேதாஜியை, விடுதலை இந்தியா ஆங்கிலேய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு பிரிவு இருப்பதாகப் பெரிதும் பேசப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திரஜித் குப்தா அவர்கள் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்த போதும் கூட, இது குறித்து அரசின் சார்பில் தெளிவான விளக்கம் வெளியிட்டதாகவும் தெரியவில்லை....

இந்திய விடுதலைக்குப் போராடிய ஒரு மாபெரும் இந்தியத் தலைவருக்கு சுதந்திர இந்தியாவில் நேர்ந்த நிலை இது.

அதனால் நேதாஜியின் பங்கு மக்களால் மறக்கப் பட்டதா?

இல்லையே...

தங்கள் நினைவிற்கு எடுத்த வரக் காரணம்,

1. விடுதலைக்குப் போராடும் வழி எவ்வழியாயினும், மக்கள் மறப்பதில்லை. அதன் தலைவர்கள் மக்கள் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் பிடிப்பர்.

2. வெளி நாட்டின் போராட்டங்கள் ஒரு அழுத்தத்தைத் தான் தரும். புரட்சி அந்த மண்ணில் வாழும் மக்களிடமிருந்து தான் பிறக்க வேண்டும்.

கிழக்கு வங்கத்தில் நடந்த புரட்சியில் இந்தியாவின் தலையீட்டில் தனி நாடு உருவானதையும் ஃபீனிக்ஸ் எம் திமுக ஐந்தாம் பகுதியில் பார்த்தோம்.

மேலைநாடுகளின் முயற்சியால் மட்டும் தனித் தமிழ் ஈழம் கிட்டி விடுமா?

தீவிரதவாத நாடுகளின் பட்டியலில் ஏன் இன்னும் இலங்கை சேர்க்கப் படவில்லை?

இந்தியாவில் பேராயக் கட்சியையும், தமிழகத்தில் திமுகவையும் இழித்துப் பேசி, ஈழச் சிக்கலில் தமிழக/ இந்திய அரசியல் ஆதாயத்திற்காக இரு பெரும் கட்சிகளையும் பழித்துப் பேசி தேர்தல் 2009ல் தோற்கடிப்பதனால் தனி ஈழம் உருவாகி விடுமா?

அரசியல் பேசுவோர் , பேசட்டும். கவலையில்லை, ஏனெனில் அது அவர் பிழைப்பு ஓரிண்டு இடத்திற்கு ஓடோடி சேவகம் செய்ய வேண்டும்.

ஆனால் சில அறிஞர்கள், ஆய்வாளர்கள் பிழைப்பது ஏன்?

அரசியல் சாயம் பூசி ஏன் என் இனத்தைத் திசை திருப்புகின்றனர்.

தேர்தல் 2009ல் திமுகவை தோற்கடிக்கக் கூவும் அரசியல் குழுவினில் இணைந்து, திமுகவைத் தோற்கடித்த பின் ஈழத்தைத் தங்கத் தட்டில் இலங்கை தங்களுக்கு வழங்கி விடுமா?

இந்தப் பிழையான வாதத்தின் வேர் எங்கு தோன்றியது?

ஏன் தோற்றுவிக்கப் பட்டது?

மூலம் அறிவீரா?

அறிவுள்ள அறிஞர் குழாமே, சிந்தியுங்களேன்....

சிந்திப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்

.கவி.

No comments:

Post a Comment