Thursday, May 28, 2009

அமைச்சர் அழகிரிக்கு ஒரு தமிழ் வேண்டுகோள்

மதிப்பிற்குரிய மத்திய அமைச்சர் அழகிரிக்கு ஒரு தமிழ் வேண்டுகோள்.

சங்கம் வளர்த்துத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் மைந்தர் இன்று மத்திய அமைச்சராக.

மத்தியில் தமிழ் மொழியும் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற நிலை நிச்சயம் அடைந்து விடுவோம்.

தங்கள் பார்வைக்கு வரும் ஒவ்வொரு கோப்பிற்கும் தமிழ் மொழி மொழிபெயர்ப்பு அவசியம் என்று உத்தரவு போடுங்கள்.

கோடானா கோடித் தமிழர்களின் தமிழ் கணினியில் ஏறும், ஆனால் ‘இந்தி’ ய அரசில் ஏறாது.

என்ன முறை இது.

பல்லாயிரம் கோடி பட்ஜெட் போடும் ’இந்தி’ய அரசு ஒரு தமிழ்-ஆங்கிலம்-இந்தி மொழிபெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும் ஒவ்வொரு துறைக்கும்.

செம்மொழித் தமிழ் தங்கள் அமைச்சகத்தில் சீர் உயர் பெறட்டும்.

தங்களால் தகர்க்கப்படட்டும் இந்தத் தறுதலைகளின் தமிழ் எதிர் வாதம்.

அன்புடன்

.கவி.

தினமணி தலையங்கம்:

(தினமணி தகவலுக்கு நன்றி : திரு. வெற்றிப்பாண்டியன் - திருத்தங்கல், இருப்பு : வாசிங்டன்.டிசி.)

சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, நெல்லை, சேலம் என்று ஏனைய நகரங்கள் எல்லாம் மத்திய அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இப்போது முதல்முறையாக மதுரைக்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார்.

முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் செயல்பாடுகளிலும் அவர் கையாளும் அரசியல் வழிமுறைகளிலும் நம்மில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். மத்திய அமைச்சரவையில் அவர் இடம்பெற்ற விதத்தில் கூட நம்மில் பலர் முகம் சுளித்தது உண்மையிலும் உண்மை. ஆனால் அதைவிட நிதர்சனமான உண்மை மு.க.அழகிரி மத்திய அமைச்சர் என்பது!

முதல்வர் கருணாநிதியின் மகன், திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்கிற தகுதிகள் எல்லாம் பின்னால் தள்ளப்பட்டு இப்போது தமிழகத்தின் சார்பில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக மத்திய அமைச்சரவையில் ஒரு பொறுப்புள்ள பதவி வகிக்கும் மாண்புமிகு அமைச்சராக மு.க.அழகிரி மாறியிருப்பது அவரிடம் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்ப்பதில் தவறு காணமுடியாது.

அழகிரிக்கு ஆங்கிலம் பேசத் தெரியுமா? கோப்புகளைப் பார்க்கத் தெரியுமா? நாடாளுமன்றத்தில் அவ்வப்போது எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியுமா? பல மேதைகளும் அரசியல் ஜாம்பவான்களும் அமர்ந்த இடத்தில் போய் அமரும் தகுதி இருக்கிறதா? இப்படி எத்தனை எத்தனையோ விமர்சனங்கள் திமுகவின் எதிர் முகாம்களில் இருந்தும் ஊடகங்களிலும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த விமர்சனங்களுக்கு அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

1952 முதல் இதுவரை அமைந்த 15 மக்களவைகளின் உறுப்பினர்களாக இருந்த பலரைப் பற்றி மேலே எழுப்பப்பட்ட கேள்விகள் இப்போதும் எழுப்பப்படலாம் என்பதுதான் உண்மை. ஆங்கிலம் தெரிந்திருப்பதும் விவாதங்களில் பங்கேற்று உரையாற்றும் திறமை உள்ளவர்களும் மட்டுமே மக்களவை உறுப்பினர்களாக ஆகவேண்டும் என்று சட்டமும் இல்லை. அப்படிப்பட்ட தகுதி இல்லாதவர்கள் அனைவருமே செயல்படாத உறுப்பினர்களாக இருந்துவிடவும் இல்லை.

வைகைக் கரையில் தன்னைச் சுற்றி சிறியதொரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு அரசியல் நடத்தத்தான் அழகிரிக்குத் தெரியும் என்று விமர்சனம் செய்பவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். யமுனைக் கரையில் தேசிய அரசியல் நீரோட்டத்தில் சங்கமிக்கும்போது ஆர்ப்பாட்ட, அடாவடி அரசியலால் தங்களை அடையாளம் காட்டிக் கொண்ட பலரும் அரசியல் முதிர்ச்சியும் நாகரிகமும் பெற்றவர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள் என்பதுதான் சரித்திரம் நமக்கு உணர்த்தியிருக்கும் உண்மை.

திமுகவின் பொருளாளரும் முதல்வர் கருணாநிதியின் இளைய மகனும் மாநில உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்குக் கிடைக்காத வாய்ப்பு மத்திய அமைச்சராகி இருக்கும் மு.க.அழகிரிக்கு கிடைத்திருக்கிறது. முன்பு சென்னை மாநகர மேயராகவும் இப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் செயல்படும் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய சாதனை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவுமே செய்துவிட முடியவில்லை. அதற்குக் காரணம் கருணாநிதி என்கிற ஆலமரத்தின் கீழே வேறு எதுவும் தழைத்துவிட முடியாது என்பதுதான்.

ஆனால் மத்திய அமைச்சரான மு.க.அழகிரிக்கு அப்படிப்பட்ட நிர்பந்தங்கள் எதுவும் இல்லை. மாநில அரசு போலில்லாமல் மத்திய அரசில் அமைச்சர்கள் தங்களது தனித்துவத்தை நிலைநாட்டிக் கொள்ளும் சுதந்திரமும் அவகாசமும் முழுமையாகத் தரப்படுகிறது. எடுத்த காரியத்தை முடிக்கும் திறமை உடையவர் என்று அவரது ஆதரவாளர்களால் வர்ணிக்கப்படும் மு.க.அழகிரி, மத்திய அமைச்சராக நல்ல பல திட்டங்களை நிறைவேற்ற முற்படுவாரேயானால் அவரை நாடு போற்றும்.


எழுபதுகளின் ஆரம்பத்தில் மத்திய உணவுத்துறையின் அப்போதைய அமைச்சர் சி.சுப்பிரமணியத்தின் தொலைநோக்குப் பார்வையில் உருவானதுதான் "பசுமைப்புரட்சி' திட்டம். அதன் விளைவாக இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. உணவு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியத்தின் பங்களிப்பு இப்போதும் பேசப்படுகிறது, பாராட்டப்படுகிறது. அதுபோல அமைச்சர் மு.க.அழகிரி இந்திய சரித்திரத்தில் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டால் அது ஒன்றும் இயலாத விஷயமல்ல.

தேவிலாலும் லாலுபிரசாத் யாதவும் முலாயம்சிங் யாதவும் அமைச்சர்களாகச் செயல்பட்டு முத்திரை பதிக்க முடிந்ததென்றால், முதல்வர் கருணாநிதியின் மகனால் முடியாத விஷயமாக அது இருக்க முடியாது. அரசியலையும் நிர்வாகத்தையும் சுவாசித்து வளர்ந்த அழகிரி, நேர்மையும் திறமையும் உள்ள நிர்வாகிகளைத் தேடுகிறார் என்கிற செய்தி வியப்பளிக்கவில்லை. தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு வித்தியாசமான அழகிரி, யமுனைக் கரையில் உருவாகக் கூடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இனிமேல் அழகிரி பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை. அதிகாரம் என்பதுகூட அவர் பார்க்காததோ, அனுபவிக்காததோ அல்ல. ஆனால், புகழ் என்பதும் சாதனை என்பதும் தகுதி என்பதும் அவர் தேடிக்கொள்ள வேண்டிய விஷயங்கள். அதற்கான வாய்ப்பை மத்திய அமைச்சர் பதவி அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. "செயல் வீரர்' அதை நன்கு பயன்படுத்துவார் என்று நம்புவோமாக

14 comments:

ISR Selvakumar said...

அருமை!

Kannan said...

Excellent article it is!!! Keep it up! Its very good advice and information to our MP Mr.M.K Alakiri.

dsfs said...

அருமையான பதிவு.நன்றி
http://ponmalars.blogspot.com

.கவி. said...

வருகைக்கு நன்றி திரு. செல்வகுமார். அன்னைத் தமிழ் அரியணை மீண்டும் ஏறும்.

.கவி.

Anonymous said...

//இனிமேல் அழகிரி பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை//
தேர்தலில் வீட்டுக்கு வீடு அள்ளி வீசிய 500 ரூபாய்களை உங்கள் அப்பனா வந்து கொடுப்பான்

முதலில் அழகிரி அவர்கள் குடியிருக்கும் வீட்டு பகுதிகளில் (TVS & Sathyasai நகர்) உள்ள சாலைகளையும் மதுரையின் உள்கட்டமைப்பையும் மாற்றட்டும்.

.கவி. said...

அடையாளமற்ற நண்பரே.

குறைகளைக் களைய வேண்டும். இல்லை என்று நான் கூறவில்லை. உங்களின் மாநகராட்சி உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் இணைத்துக் கொண்டு செயல் படுவோம்.

நம் அரசு, நம் மக்கள் என்ற எண்ணத்துடன் உழைத்தால் தான் நாடு முன்னேறும். வெட்டி இணையப் பேச்சுகளால் என்ன பயன் நண்பரே?
.கவி.

.கவி. said...

வருகைக்கு நன்றி பொன். மலர்.

தமிழ்-தமிழர்-தமிழினம் முன்னேற்றம் தான் திமுக என்ற பேருண்மையும், தமிழ் முன்னேற முன்னணியில் எப்போதும் இருப்பது திமுக தான் என்பதும் அனைவரும் அறிந்தது தானே

.கவி.

Anonymous said...

//தமிழ்-தமிழர்-தமிழினம் முன்னேற்றம் தான் திமுக என்ற பேருண்மையும், தமிழ் முன்னேற முன்னணியில் எப்போதும் இருப்பது திமுக தான் என்பதும் அனைவரும் அறிந்தது தானே//
appadiya?

andha elloril nan illai:-)

Anonymous said...

pls read about the defects of Green Revolution in India... It has committed to the suicide of our cultivation... read cofession of ms swaminathan also

shabi said...

இப்ப துணை முதல்வர் ஆயிட்டாரே ஸ்டாலின் எல்லா பொறுப்பும் அவனுங்களுக்கே

.கவி. said...

அன்புள்ள அடையாளமற்ற நண்பரே, அந்த ஒருவரில் நீங்களும் இணையும் நாள் வெகு விரைவில்.

இயன்றால் ஃபினிக்ஸ் எம் திமுகவின் 25 பகுதிகளையும் படியுங்கள். எங்களை நோக்கி உங்கள் மனம் உங்களையறியாமலே நாடி வரும் :)

நட்புடன்
.கவி.

.கவி. said...

அன்புள்ள அடையாளமற்ற நண்பரே, பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி எனப் பல புரட்சிகள் பாரதத்தில் உருவாகியுள்ளன.

அந்தப் புரட்சிகள் உருவான நேரத்தில் நிலை என்ன என்று முதலில் அறிந்து, அந்த நேரத்தில் அது சிறந்த முடிவா என்று ஆய்ந்தறிந்து செய்ய வேண்டும்.

சில நேரங்களில் தவறும் நேரலாம். நீங்களே உங்கள் வாழ்க்கையில் நடந்தவற்றைச் சிந்தித்துப் பாருங்கள், நிச்சயம் பல செயல்களை மாற்றிச் செய்திருக்கலாம் என்று தோன்றும், அதனால் அது தவறு என்று கொள்ளலாகுமா? சிந்தியுங்களேன் தோழரே...

நட்புடன்
.கவி.

.கவி. said...

அன்புள்ள நண்பர் ஷாபி.

இது குறித்தும் பதிவுள்ளது. இயன்றால் படியுங்கள். பின் கருத்துக் கூறுங்கள்.
தெளிவடைவோம். நிகழ்வுகள் அறியாமல் அள்ளித் தெளிப்பது அழகல்ல தானே ஷாபி.

http://kavise.blogspot.com/2009/05/23-2009-8.html

நட்புடன்
.கவி.

.கவி. said...

வருகைக்கு நன்றி கண்ணன்.

தமிழ்-தமிழர்-தமிழின உணர்வை அமைச்சர் அழகிரி கலைஞர் கட்டிக் காக்க வேண்டும் என்ற நமது வேண்டுகோளை நிச்சயம் ஏற்பார்.

அன்புடன்
.கவி.

Post a Comment