Friday, May 29, 2009

அடுத்த தலைமுறை அரசியல் அறிவீர்!!!

அடுத்த தலைமுறை அரசியல் அறிவீர்!!!


வாழ்த்துரைகள் வந்திருக்கும். (1)

பொறாமை, பொல்லாப்பு, புறங்கூறல்,புலம்பல், பூசி மொழுகல் இடுகைகள் இந்நேரம் வந்து முடிந்திருக்கும்.

நிதானமற்றவர் நிந்தனைகளை நீக்கி, நாமினி நிதானாமாக நமது அடுத்த தலைமுறை அரசியல் பற்றிப் பேசலாம், சிந்திக்கலாம்.

இதோ, இதோ என்று, காத்திருந்த கண்கள் பலமுறை பூத்துப் போக, கருணையின் புதல்வர் மு.க. ஸ்டாலின், முதல்வர் முகவின் கடமைகளுக்குத் துணையாக கடைசியாக தமிழகத்தின் துணை முதல்வராக நியமிக்கப் பட்டார்.


நண்பர்கள் கவனிக்க வேண்டும்.

இந்த அறிவிப்பைக் கலைஞர் என்றோ வெளியிட்டிருக்க முடியும்.

இருப்பினும் காலம் கனியட்டும் என்று காத்திருந்தே வெளியிட்டார் கலைஞர்.

தளபதியும் தன் பங்குக்கு மீண்டும் மீண்டும் புடம் போடப்பட்ட பொன்னாக மிளிர்ந்தார்.

அரசியல் எதிரிகளை நட்பாகவும் எதிர்கொள்ள முடியும். அந்தச் சக்தி எனக்கு உண்டு என்று என்றோ நிருபித்தவர் தளபதி.

தமிழக நலன்களுக்காக எதிர்க்கட்சியில் இருந்த போதும், அந்நாள் முதல்வரை முகம் கோணாமல், முதல் கண்டு, தனி மனித அரசியலை விட தமிழக மக்கள் நலம் பெரிதென நம் மக்கள் நலம் காத்தவர்.


ஆட்சி என்ற ஆடையில்லாமல் பாமரராகவும் பண்போடு வாழ்ந்து காட்டிய பண்புத் தளபதி.


’அண்ணன்’ ஆரோக்கியமாக இருக்கும் போது, திண்ணையை நோட்டமிட்டவர் மத்தியில், அண்ணனுக்கும் பொறுப்பு, பின்னரே எனக்கு என்ற பரத குணம்.

தலைவரின் உடல் நிலை மிகவும் குன்றிய நிலையில், தமிழகத்தை வழி நடத்த இளையதலைமுறைத் தலைவர்கள் உருவாகி வழி நடத்த வேண்டிய கட்டாயம்.

நாட்டின் நலன் கருதி தளபதி தாங்க வேண்டிய தர்ம சங்கடம்.

பிதற்றாளர் பிதற்றல் கண்டிருப்பீர்கள்.

அவர் பிதற்றலால் நம் இனத்திற்கென்ன பயன்?

பயனில்லா பிதற்றல்களை நீக்கிப் பயனுள்ள கருத்துக்களை தளபதிக்கு அளிப்போம்.

தமிழ்-தமிழர்-தமிழினம் என்ற போர்வையில் நாடகம் ஆடியவரை நாடு ஒதுக்கி விட்டது.

ஆனால், கவனம் தேவை.

நியூட்டனின் இரண்டாம் தத்துவம் நினைவில் உள்ளதா, மாற்றுருவில் அந்தச் சக்திகள் தாக்க நேரம் கணித்துக் கொணடே இருக்கும்.

தலைவர் கலைஞர் போல் தமிழ்-தமிழின உணர்வு அடுத்த தலைமுறையில் இல்லை என்ற குற்றச்சாட்டு மிகுந்தே ஒலிக்கும் இனி.


தளபதி அறியாதவர் அல்ல.

பல ஆண்டுகளாக கலைஞரின் நிழலில் வளர்ந்தவர்.

ஐம்பது ஆண்டு காலம் தமிழருக்கென்றே உழைத்த கலைஞரையே, தரம் குறைந்த சொற்கள் கூறித் தாக்கியவர்கள், தளபதிக்கு மலர்ப்பாதை அமைத்துத் தருவார்கள் எனக் கூற இயலாது.


எதிர்பார்க்கும் அளவிற்கு நாம் அரசியல் பாலகர்களும் அல்ல.

தளபதி தமிழ்-தமிழர்-தமிழினம் என்றால் கலைஞருக்குச் சளைத்தவரல்ல என்று நிருபிக்க வேண்டிய பெரும் கடமை துணை முதல்வருக்கு உண்டு.

கலைஞரை விஞ்சுவாரா இளைய தளபதி?

விஞ்சுவார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

தமிழ்ப் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

அன்புடன்

.கவி.


அடிக்குறிப்பு:

1. தினமணி தலையங்கம்

எப்போதோ நடந்தேறியிருக்க வேண்டிய ஒன்று காலதாமதமாக இப்போதாவது நடந்திருக்கிறதே என்கிற வகையில் மகிழ்ச்சி. மு.க. ஸ்டாலினுக்குப் பதவியும் அங்கீகாரமும் ஆரம்பம் முதலே தாமதமாகத்தான் கிடைத்து வருகிறது. 1989-ல் 13 ஆண்டு அரசியல் வனவாசத்திற்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தபோது மு.க. ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டிருந்தால் யாரும் குற்றம் கண்டிருக்க மாட்டார்கள். ஏனோ, முதல்வர் கருணாநிதி அவரை அமைச்சராக்கவில்லை. இன்றைய அமைச்சரவையில், க. அன்பழகன் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தவிர ஏனைய மூத்த அமைச்சர்களான ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி. மணி, பொன்முடி மற்றும் கே.என். நேரு ஆகியோர் முதன்முதலில் அமைச்சர்களானது அப்போதுதான்.


1996-ல் ஆட்சிக்கு வந்தபோது மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்த்தால் மீண்டும் ஏமாற்றம். சென்னை நகர மேயராக்கப்பட்டார். அவர் நிர்வாக அனுபவம் பெற வேண்டும் என்று தந்தையும் முதல்வருமான கருணாநிதி எதிர்பார்த்ததில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியலில் அனுபவமே இல்லாத பலரை அமைச்சர்களாக்குவதில் தயக்கம் காட்டாதவர் தனது மகனிடம் மட்டும் ஏன் தயக்கம் காட்டினார் என்பது புதிர்.


ஏனைய பல திமுக தலைவர்களைவிட, கட்சிப் பொறுப்பையோ ஆட்சிப் பொறுப்பையோ ஏற்கும் தகுதியும் அனுபவமும் மு.க. ஸ்டாலினுக்கு நிச்சயமாக உண்டு. அவரது அரசியல் வாழ்க்கை 70-களில் தொடங்கிவிட்டது. திமுக தலைவர் கருணாநிதியின் மகன் என்பதைவிட அடிமட்டத்திலிருந்து தன்னை உயர்த்திக் கொண்டவர் என்பதுதான் மு.க. ஸ்டாலினின் உண்மையான பலம்.


கட்சிக்குப் பிரசார நாடகங்கள் போடுவது, கட்சியின் போராட்டங்களில் பங்கு பெறுவது, இளைஞர் அணியை வலுவான அமைப்பாக மாற்றி இன்றைய தலைவர்கள் பலரை உருவாக்கியது என்று கட்சிக்கு அவரது பங்களிப்பு கொஞ்சநஞ்சமல்ல. அடிமட்டத் தொண்டராகத் தொடங்கிய அவரது அரசியல் வாழ்க்கை இளைஞரணி, சட்டப்பேரவை உறுப்பினர், சென்னை மாநகர மேயர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், அமைச்சர் என்று தொடர்ந்து இப்போது துணை முதல்வர் பதவியில் அவரை அமரச் செய்திருக்கிறது.


கட்சியைப் பொருத்தவரை அவர் தன்னை ஒரு சக்தியாகத் தொண்டர்கள் மத்தியில் வளர்த்துக் கொண்டிருப்பது உண்மைதான் என்றாலும், இதுவரை அவரால் தனது தனித்தன்மையைக் காட்ட முடியாமல் இருப்பது ஏன் என்பதுதான் பலருக்கும் புரியாத புதிர். ஏனைய அமைச்சர்கள் எல்லோரும் பத்திரிகையாளர்களிடம் சகஜமாகப் பேசுவதும், பேட்டியளிப்பதுமாக இருக்கும்போது மு.க.ஸ்டாலின் மட்டும் ஒதுங்கியே இருப்பது ஏன் என்று ஆச்சரியப்படாதவர்கள் இல்லை.


அதற்கு ஒரு முக்கியமான காரணம், அவர் கருணாநிதி என்கிற ஆலமரத்தின் நிழலில் இருப்பதுதான் என்று கருத வழியுண்டு. நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், மதியழகன் போன்ற ஜாம்பவான்கள்கூட கருணாநிதி என்கிற சூரிய வெளிச்சத்தின் முன்னால் பிரகாசிக்க முடியாதபோது இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்ட மு.க. ஸ்டாலினால் மட்டும் அது எப்படிச் சாத்தியம்?


மேலும், மு.க. ஸ்டாலினுக்குத் தந்தை கருணாநிதியிடம் இருக்கும் பயம் கலந்த மரியாதையால்கூட தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பாமல் இருக்கலாம். தனிமனித நாகரிகத்தைக் கடைப்பிடிப்பதில் மற்றவர்களிடமிருந்து எப்போதுமே வேறுபடுபவர் அவர். சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட சம்பவத்தின்போது எம்.எல்.ஏ.வான அவர் கடைப்பிடித்த நிதானம் அதற்கு ஓர் உதாரணம். தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது என்று மு.க. ஸ்டாலின் நினைப்பதுகூட காரணமாக இருக்கலாம்.


மேயராகவும் சரி, உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் சரி மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகளில் யாரும் பழுது காண முடியாது. தகுதியும் திறமையும் வாய்ந்த அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து, தனது துறையின் செயல்பாடுகளில் குற்றம் காண முடியாதபடி நிர்வகிப்பதில் அவர் யாருக்கும் சளைத்தவரல்ல. அதேநேரத்தில், மிகப்பெரிய சாதனை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருடைய நிர்வாகத் திறமை பளிச்சிடவும் இல்லை.


முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் முதுகுத்தண்டு அறுவைச்சிகிச்சைக்குச் சென்றபோதே ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதுதான் நமது கருத்து. இந்தத் தள்ளாத வயதில் வீல் சேரில் முதல்வர் அங்குமிங்கும் பயணிப்பதும், தன்னை வருத்திக்கொண்டு நாளும் கிழமையும் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிப்பதும் பிரச்னைகளை எதிர்கொள்வதும் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இந்தப் பொறுப்புகளைத் துணை முதல்வரான மு.க. ஸ்டாலின் இனிமேல் ஏற்றுச் செயல்படுவார் என்று நம்பலாம்.


இதுநாள் வரை முதல்வர் கருணாநிதியின் நிழலாக இருந்தவர் இனிமேல் தனது தனித்தன்மையைக் காட்ட வேண்டிய நேரம் கைகூடியிருக்கிறது. சுறுசுறுப்புடனும் அரசியல் சாதுர்யத்துடனும் தனது பொறுப்புகளை அவர் கையாளும் விதத்தில்தான் அவருடைய வருங்காலமும், திமுகவின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.

தமிழக சரித்திரத்தில் முதன்முறையாக ஒரு துணை முதல்வர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்தவகையில் மு.க. ஸ்டாலின் ஒரு முதல்வர்கூட. "தினமணி'யின் வாழ்த்துகள்.

No comments:

Post a Comment